search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி அருணா ஜெகதீசன்"

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதிபதி அருணாஜெகதீசன் இன்று 2-வது நாளாக 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார். #Sterliteprotest #ArunaJagadeesan #ThoothukudiFiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக தேசிய, மாநில மனித உரிமை கமிசன் விசாரணை நடத்தியது. துப்பாக்கி சூடு தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

    அவர் கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டன. அந்த பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 3 கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 24 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    நேற்று 4-வது கட்டமாக விசாரணை நடத்துவதற்காக விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு சென்றார். தொடர்ந்து அவர் விசாரணையை தொடங்கினார்.

    4-வது கட்ட விசாரணைக்காக மொத்தம் 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் நேற்று ஆஜராவதற்காக சம்மன் வழங்கப்பட்ட 8 பேரில் 7 பேர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இன்று ஆஜராவதற்காக 10-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனால் இன்று விசாரணை ஆணைய அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். தொடர்ந்து வருகிற 20-ந் தேதி வரை ஆணையம் விசாரணை நடத்துகிறது. #Sterliteprotest #ArunaJagadeesan #ThoothukudiFiring
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் 3-ம் கட்ட விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது. #Thoothukudifiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது.

    இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி இந்த ஆணையத்தின் முதற்கட்ட விசாரணை தொடங்கியது. பின்னர் பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 2-வது கட்ட விசாரணை கடந்த 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடந்தது.



    தற்போது 3-வது கட்டமாக தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள ஒருநபர் ஆணைய முகாம் அலுவலகத்தில் நேற்று முன்தினம் விசாரணை தொடங்கியது. இதில் துப்பாக்கிசூட்டில் காயம் அடைந்தவர்கள், பலியானவர்களின் உறவினர்கள் உள்பட மொத்தம் 19 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று முன்தினம் 7 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் 5 பேர் மட்டுமே ஆஜர் ஆனார்கள். முருகேசுவரி, பாலையா ஆகியோர் ஆஜராகவில்லை.

    3-வது கட்ட விசாரணையின் 2-வது நாளான நேற்றும் 7 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். இதில் தூத்துக்குடி தேவர் காலனியை சேர்ந்த ராமசந்திரன், முத்தம்மாள் காலனியை சேர்ந்த ராஜா, இந்திரா நகரை சேர்ந்த ராஜாசிங், கோவில்பிள்ளைவிளையை சேர்ந்த பெனிஸ்டன், திரேஸ்புரத்தை சேர்ந்த சிலுவை ஆகிய 5 பேர் ஆணைய அதிகாரி அருணா ஜெகதீசன் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். 2 பேர் வரவில்லை.

    இந்நிலையில் இன்று ஒரு நபர் விசாரணை ஆணையம் முன்பு எஞ்சியவர்கள் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதைத்தொடர்ந்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் 3-ம் கட்ட விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது. #Thoothukudifiring


    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்களிடம் விசாரணை நடத்த நீதிபதி அருணாஜெகதீசன் மீண்டும் தூத்துக்குடிக்கு வருகிறார். #Thoothukudifiring #Arunajagadeesan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 22ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மாநில மற்றும் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் தூத்துக்குடி வந்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் தங்களின் விசாரணை அறிக்கையை தயார் செய்து வருகின்றனர்.

    மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இதைத்தொடர்ந்து நீதிபதி அருணாஜெகதீசன் தூத்துக்குடியில் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    சம்பவம் தொடர்பாக தைரியமாக வந்து ஆணையம் முன்பு விளக்கவும், பிரமாண பத்திரம் (அபிடவிட்) தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினார். இதற்காக தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள அரசின் பழைய சுற்றுலா மாளிகையில் ஒருநபர் ஆணைய முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பாண்டு ரங்கன் தலைமையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    அவர்களிடம் பொது மக்கள் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்து வருகின்றனர். இதேபோல் சென்னையில் கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள விசாரணை ஆணைய அலுவலகத்திலும் பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டு வருகின்றன. வருகிற 30-ந் தேதி வரை மக்களிடம் இருந்து பிரமாண பத்திரம் பெறப்படுகிறது. நேரில் வர முடியாதவர்கள் தபாலிலும் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.



    இதைத்தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரும், காயமடைந்தவர்களும் தனித்தனியாக பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்து வருகிறார்கள். கலவரத்தின் சேதமான வாகன உரிமையாளர்களும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து வருகின்றனர்.

    சிலர் வக்கீல்கள் உதவியுடன் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்கின்றனர். பிரமாண பத்திரங்கள் தாக்கல் முடிவடைந்ததும் அவை ஆய்வு செய்யப்படுகின்றன. இதைதொடர்ந்து அடுத்த மாதம் முதல் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக முகாம் அலுவலகத்தில் கோர்ட்டு அறையும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    சம்பந்தப்பட்டவர்கள் நின்று சாட்சியும் அளிப்பதற்காக பிரத்யேகமாக விசாரணை கூண்டு அமைக்கப்ப‌ட்டு உள்ளது. பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதால் விசாரணையும் ரகசியமாகவே நடைபெறும் என தெரிகிறது. இதற்காக நீதிபதி அருணாஜெகதீசன் மீண்டும் தூத்துக்குடிக்கு வருகிறார்.

    அவர் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் தங்கியிருந்து விசாரணை மேற்கொள்வார் என தெரிகிறது. 2 மாதம்வரை விசாரணை நடைபெறும் எனவும், அதன்பிறகு விசாரணை அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. #Thoothukudifiring #Arunajagadeesan


    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தனது முதல் கட்ட விசாரணையை நிறைவு செய்துவிட்டு நேற்று மாலை தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். #Thoothukudifiring #Arunajagadeesan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒரு நபர் விசாரணை கமி‌ஷனை தமிழக அரசு நியமித்தது. இதைத்தொடர்ந்து நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடி வந்து விசாரணை நடத்தினார்.

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற கலெக்டர் அலுவலகம், திரேஸ்புரம், அண்ணாநகர் ஆகிய இடங்களையும் மற்றும் கலவர பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். கலெக்டர் அலுவலகத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட வாகனங்கள், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பில் சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

    கடந்த 4 நாட்களாக துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரையும் அவர் நேரடியாக சந்தித்து விசாரணை நடத்தினார்.



    மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் பார்வையிட்டு துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விபரங்களை சேகரித்தார்.

    அதுமட்டுமின்றி தூத்துக்குடி சுற்றுலா மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து பிரமாண வாக்குமூலம் பெற்றார். இதில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மற்றும் பலியானவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தனர்.

    இதே போல் சென்னையில் கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள விசாரணை ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் பிரமாண வாக்குமூலம் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் பெறுவதற்காக பிரத்யேக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பிரமாண வாக்குமூலத்தை பெற்று வருகின்றனர். வருகிற 30-ந்தேதி வரை பிரமாண வாக்குமூலம் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே நீதிபதி அருணா ஜெகதீசன் தனது முதல் கட்ட விசாரணையை நிறைவு செய்து விட்டு நேற்று மாலை தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். ஓரிரு நாட்களுக்கு பின் அவர் மீண்டும் தூத்துக்குடிக்கு வந்து விசாரணை நடத்த உள்ளார். #Thoothukudifiring #Arunajagadeesan



    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் சாட்சிகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு செய்துள்ளார்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.

    அப்போது வக்கீல் சூரிய பிரகாசம் ஆஜராகி, தூத்துக்குடியில் கடந்த மே 22 மற்றும் 23-ந்தேதிகளில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்று நான் தொடர்ந்தேன்.

    ஐகோர்ட்டு, அதுகுறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.

    இந்த நிலையில், தமிழக அரசு இந்த பிரச்சினையை நீர்த்து போகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவசர அவரசரமாக ஐகோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைத்து உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கு நிலுவையில் இருக்கும்போது, தமிழக அரசின் இந்த உத்தரவு சரியானது அல்ல. தற்போது அருணா ஜெகதீசன் விசாரணையையும் தொடங்கி விட்டார். இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக நான் தொடரும் வழக்கை இன்று விசாரிக்க வேண்டும்’ என்று கூறினார்.

    இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, இது தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறினார்கள்.

    அதற்கு வக்கீல் சூரிய பிரகாசம், அதுவரை நீதிபதி அருணா ஜெகதீசன் சாட்சிகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதிகள் இது குறித்து பின்னர் பரிசீலிக்கலாம் என்று கூறினார்கள்.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி தகவல்களோ, காவல்துறை அத்துமீறல் குறித்த தகவல்களோ இருந்தால் ஜூன் 22-ம் தேதிக்குள் தரலாம் என ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார். #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் கடந்த 22-ந்தேதி நடை பெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆணையம் 22-ந்தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டிற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள், அதன் விளைவாக நிகழ்ந்த இழப்புகள் மற்றும் காயங்கள், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் சட்டம்-ஒழுங்கு நிகழ்வுகள் குறித்து விசாரிக்க உள்ளது.

    காவல் துறை தரப்பில் அத்துமீறல் ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்க உள்ளனர்.

    இதுபற்றி நேரடியாக அறிந்தவர்களும், நேரடி தொடர்பு உள்ளவர்களும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை சத்திய பிரமாண உறுதி மொழி பத்திர வடிவில் விசாரணை ஆணையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி விசாரணை ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில் விசாரணை ஆணையம் செயல்பட உள்ளதால் வருகிற திங்கட்கிழமை தூத்துக்குடி செல்கிறேன்.

    மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுகளை சந்தித்து விட்டு, ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்தவர்களை பார்வையிட உள்ளேன்.

    மறுநாள் (5-ந்தேதி) துப்பாக்கி சூடு நடந்த இடங்களை பார்வையிட முடிவு செய்துள்ளேன்.

    விசாரணை ஆணையம் சென்னையிலும், தூத்துக்குடியிலும் செயல்படும். இதில் சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×